ஊரக வேலை உறுதி திட்ட பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராட்டம்


ஊரக வேலை உறுதி திட்ட பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வேலைஉறுதி திட்ட பணி வழங்ககோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், கந்தசாமி, மனோகரன், கோவிந்தசாமி, பூபதி, மீனாட்சி, சுசிலா, பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தேசிய ஊரக வேலைஉறுதிதிட்ட பணியை அனைத்து குடும்பங்களுக்கும் தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதிதிட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். நடப்பு ஆண்டில் போதிய மழை பெய்யாததால் விவசாய பணிகள் முடங்கி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி காலத்தில் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணிகளை மீண்டும் மாநிலம் முழுவதும் தொடங்க வேண்டும். வேலைஅட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலை மற்றும் கூலி கிடைக்கும் வகையில் தொழிலாளர் பட்ஜெட்டுகளை தயார் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க நிர்வாகி ராஜா தலைமையிலும், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க நிர்வாகி குமரேசன் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் சங்க மாவட்ட செயலாளர் முத்து தலைமையிலும் மனுகொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். 

Next Story