லாரி மீது கார் மோதி விபத்து பெங்களூரு டாக்டர் தம்பதி உள்பட 3 பேர் பலி


லாரி மீது கார் மோதி விபத்து பெங்களூரு டாக்டர் தம்பதி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2018 4:30 AM IST (Updated: 31 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் பெங்களூரு டாக்டர் தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி. நகரில் உள்ள கங்கா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 70). டாக்டரான இவர், அங்கு தொழிற்சாலையும் நடத்தி வந்தார். இவரது மனைவி அம்புஜம் (63). பிரபல டாக்டரான இவர் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார்.

இவர்களுக்கு ஸ்ரீராம், ராஜன் என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்களும் டாக்டர்கள் ஆவார்கள். இந்த நிலையில் ராமச்சந்திரனும், அவரது மனைவி டாக்டர் அம்புஜமும், கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு காரில் சென்றனர். காரை பெங்களூரு கங்கா நகரைச் சேர்ந்த டிரைவர் பைசு (32) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் பெங்களூரு நோக்கி காரில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கார் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் முன்னால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து தேங்காய் ஓடு ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ராமச்சந்திரன், அவரது மனைவி அம்புஜம், கார் டிரைவர் பைசு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story