கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவல் எழும்பூர் கோர்ட்டு உத்தரவு


கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவல் எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Jan 2018 3:00 AM IST (Updated: 31 Jan 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

பிரபல கொள்ளையன் நாதுராமை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #police #Tamilnews

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராமை பிடிப்பதற்காக மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.

அவர்களை பிடிக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிசூட்டில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜஸ்தான் போலீசார் நாதுராமின் கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீண்ட தேடுதலுக்கு பிறகு ஜெய்ப்பூர் போலீசார் கொள்ளையன் நாதுராமை சமீபத்தில் கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டு ராஜஸ்தான் தப்பிச்சென்றதாக தெரிவித்தான்.

10 நாள் போலீஸ் காவல்

இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து நாதுராமை சென்னைக்கு தமிழக போலீசார் அழைத்து வந்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் ராஜமங்கலம் போலீசார் மனு செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் எழும்பூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத், கொள்ளையன் நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பக்தாராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் 3 பேரையும் ராஜமங்கலம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடித்தது எப்படி?

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எங்கு விற்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே நகைகளை வாங்கிய அடகு கடைக்காரரும் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று (புதன்கிழமை) கொள்ளை நடந்த கடைக்கு நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளை அழைத்து வந்து, அவர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள்? என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story