பா.ஜனதாவின் மாநில பொதுச் செயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்


பா.ஜனதாவின் மாநில பொதுச் செயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 31 Jan 2018 2:30 AM IST (Updated: 31 Jan 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் மாநில பொதுச்செயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

சிக்கமகளூரு,

பா.ஜனதாவின் மாநில பொதுச்செயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.டி.ரவி எம்.எல்.ஏ.

சிக்கமகளூரு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் சி.டி.ரவி. இவர் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை அவர் நேற்று காலையில் பிரித்து படித்தார். அப்போது அந்த கடிதம் ரவுடி ரியாஜ் என்ற பெயரில் எழுதப்பட்டு இருந்தது. அதில் ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டு இருந்தது.

மேலும் அந்த கடிதத்தில், “தட்சிண கன்னடா மாவட்டத்தில் தீபக்கை கொலை செய்தது போன்று, உன்னையும் கொலை செய்வோம். நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளின் அராஜகம் அதிகரித்து விட்டது. நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம். நீங்கள் எதையும் எதிர்கொள்ள தயாரா?” என்று எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அவதூறாக விமர்சித்து...

மேலும் அந்த கடிதத்தில் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா, கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஷோபா எம்.பி., பா.ஜனதா மூத்த தலைவர் அசோக் உள்ளிட்டோரையும் அவதூறாக விமர்சித்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

அந்த மிரட்டல் கடிதத்தை படித்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையை சந்தித்து மனு கொடுத்தார். மேலும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும், அந்த கடிதத்தை எழுதிய நபரை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தரும்படியும் கேட்டுக் கொண்டார்.

எனக்கு பாதுகாப்பு தேவையில்லை

பின்னர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நான் 30 வருடமாக அரசியலில் இருந்து வருகிறேன். 3 முறை மக்களால் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். பொது வாழ்க்கையில் கொலை மிரட்டல்கள் வருவது சகஜம். இதுகுறித்து நான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. இருப்பினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். எனக்கு பாதுகாப்பு அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் பற்றி போலீசார்தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அந்த கடிதத்தை எழுதிய நபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story