அவினாசி அருகே பனியன் நிறுவன தொழிலாளியை அடித்து கொன்ற 7 பேர் கைது
அவினாசி அருகே பனியன் நிறுவன தொழிலாளியை அடித்துக்கொன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். மர்ம சாவு வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவினாசி,
மதுரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 35). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ராயம்பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24–ந்தேதி காலையில் அவினாசி சங்மாகுளம் அருகே உடலில் காயங்களுடன் பாண்டியராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியராஜ் இறந்தார். இது குறித்து மர்ம சாவு என அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் பாண்டியராஜிக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மற்ற தொழிலாளர்கள் சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தாராபுரத்தை சேர்ந்த தற்போது ராயம்பாளையத்தில் வசித்து வரும் ரமேஷ் (33), சேலத்தை சேர்ந்த உதயா என்கிற உதயபிரகாஷ் (20), கோத்தகிரியை சேர்ந்த பிரவீன் (24), திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா (29), கோத்தகிரியை சேர்ந்த கவுதம் என்கிற பிரகாஷ் (28), அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த கிருபாகரன் (21) மற்றும் கைகாட்டி புதூரை சேர்ந்த சங்கர் என்கிற உமாசங்கர் (21) ஆகிய 7 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பாண்டியராஜை இவர்கள் 7 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மர்ம சாவு என்று பதிவு செய்த வழக்கை போலீசார் கொலை வழக்கமாக மாற்றி, ரமேஷ், உதயபிரகாஷ், பிரவீன், சூர்யா, பிரகாஷ், கிருபாகரன் மற்றும் உமாசங்கர் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து ரமேஷிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ராயம்பாளையத்தில் பாண்டியராஜ் குடியிருந்த வீட்டின் அருகே ரமேஷ் குடியிருந்து வந்தார். அப்போது ரமேசுக்கும், பாண்டியராஜிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அது சண்டையாக மாறி உள்ளது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் கோபம் அடைந்த ரமேஷ், பாண்டியராஜை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ய பனியன் நிறுவன மேலாளரிடம் கூறியுள்ளார்.
அதன்படி பாண்டியராஜ் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வீட்டை காலி செய்ய, வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க பாண்டியராஜ் வந்துள்ளார். இதை பார்த்த ரமேஷ் ஆத்திரம் அடைந்து பாண்யடிராஜை தாக்குவதற்காக தனது நண்பர்களான உதயபிரகாஷ், பிரவீன், சூர்யா, பிரகாஷ், கிருபாகரன் மற்றும் உமாசங்கர் ஆகியோரை வரவழைத்துள்ளார். இவர்கள் அனைவரும் வந்தவுடன், பாண்டியராஜை தாக்கி தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியராஜை சங்மாகுளம் அருகே போட்டு விட்டு சென்றதும், அதன்பின்னர் சிகிச்சை பலனின்றி பாண்டியராஜ் இறந்து விட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான அனைவரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.