கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்


கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:30 AM IST (Updated: 31 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குத்தாலம்,

வறட்சியால் விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து காத்திருக்கும் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து வட்ட தலைவர் மாசிலாமணி தலைமையில், செயலாளர் செல்வராஜ், ராயர், கணேசன், மணி, கதிரவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12 மணியளவில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுக்க சென்றனர்.

வாக்குவாதம்

அப்போது இவர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெளியில் வந்து மனுவை பெற்றுக்கொள்வார் என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் சிலரை மட்டும் அழைத்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியிடம் மனுகொடுக்க செய்தனர்.

மயங்கி விழுந்தார்

மீதி உள்ள தொழிலாளர்கள் சாலையில் நின்றிருந்தனர். அப்போது சோழம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த அம்சம் (வயது60) என்ற பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்த பெண்ணை சாலையில் படுக்கவைத்து போராட்டம் நடத்த ஒன்று கூடினர். உடனே போலீசார் மயங்கி விழுந்த பெண்ணை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிழலில் அமரவைக்க அனுமதித்தனர். அப்போது விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கு மிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் விவசாய சங்க பொறுப் பாளர்கள் போராட்டத்துக்கு வந்த அனைத்து தொழிலாளர்களின் மனுக்களை ஒன்றாக பெற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story