100 நாள் வேலை உறுதி திட்ட விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


100 நாள் வேலை உறுதி திட்ட விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடத்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் அச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் ஒன்று கூடினர். பின்னர் ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உமாமகேஸ்வரியிடம் மனு கொடுத்தனர்.

அதே நேரத்தில் ஒரு சிலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் சமையல் செய்திட அடுப்பு அமைக்க கற்களை கொண்டு வந்து வைத்தனர். மேலும் தயாராக எடுத்து வந்திருந்த சமையல் பாத்திரங்களையும் இறக்கி வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 20 ஊராட்சி பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாய தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது தரப்பட்ட மனுக்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் நிர்வாக அனுமதி பெறப்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிக்கு சுழற்சி முறையில் 100 நாள் பணிகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

உப்பிலியபுரம்

நேற்று பகல் 12 மணியளவில் சுமார் 150 விவசாய தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாக அகில இந்திய விவசாய சங்க உப்பிலியபுரம் ஒன்றிய தலைவர் எரகுடி டி.கணேசன் தலைமையில் உப்பிலியபுரம்் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். அலுவலக இரும்புக்கதவுகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டன.

அதன்பிறகு தாங்கள் வந்த நோக்கம் குறித்து போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்த ஒரு சிலர் மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அங்குள்ள கோவிலில் அமர அனுமதிக்கப்பட்டனர். உப்பிலியபுரம் மண்டல துணை தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான கே. பன்னீர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வேலை கொடுக்கவில்லை

இதில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதுவரை 52.08 சதவீதம் தான் வேலை தரப்பட்டுள்ளது. மீதம் உள்ள 47.92 சதவீத வேலையை செய்ய அனுமதி கோரப்பட்டது. வேலை கொடுக்கவில்லை என்றால், நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு 100 நாள் வேலை திட்டத்தில் தனி நபர் கழிப்பறை, சாக்கடை கால்வாய் கட்டுதல், பண்ணைக்குட்டை அமைத்தல், கான்கிரீட் சாலை போடுதல், தனியார் வயலில் வரப்பு கட்டுதல் உள்ளிட்ட 18 பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 60 நாட்கள் தான் வேலை செய்துள்ளனர். நிலுவையுள்ளமற்ற 40 நாட்களும் வேலை கொடுக்கவேண்டும். இந்த கோரிக்கைகள் கூட்டத்தில் பேசப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள்-தொழிலாளர்கள்

இக்கூட்டத்தில் வருவாய் அதிகாரி பிரேமா, கிராம நிர்வாக அதிகாரி புவனேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ராமராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், சலீம் ஜாவித், விவசாய தொழிலாளர்கள் எரகுடி முத்துக்குமார், வைரிச்செட்டிப்பாளையம் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஜெயசீலன், எரகுடி டி.கணேசன், ஒன்றிய துணை செயலாளர் ஜி.முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லால்குடி

இதே போன்று லால்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திருச்சி மெயின் ரோடு சந்தைபேட்டையில் இருந்து ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னதாக மாவட்ட குழு தலைவர் பாலா தலைமையில் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன்,மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கோமதி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜனிடம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மனு கொடுத்தனர்.

ஜீயபுரம்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள்வேலையை தொடர்ந்து வழங்க கோரி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.விவசாய சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை,ஒன்றிய செயலாளர் வினோத்மணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதையடுத்து ஒன்றிய ஆணையர் மல்லிகா மனுகொடுக்க வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் தாப்பாய், குமுளூர், கண்ணாக்குடி, பெருவளப்பூர், கல்லகம், கீழரசூர், ந.சகேந்தி, வ.கூடலுர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அடுப்புகள் உருவாக்கி சமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலையை பாதுகாக்ககேரியும், இத்திட்டத்தின்கீழ் வேலைகேட்டும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார்.விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன் போராட்டத்தினை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வீரவிஜயன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் மற்றும் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆணையர் பெரியசாமி இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின்பேரில் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதில் தா.பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலையை உடனே வழங்கிட வேண்டி நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஏ.கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.சுப்ரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 250 பெண்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பணி வழங்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story