அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கல்வி சீர் வழங்கும் விழா


அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கல்வி சீர் வழங்கும் விழா
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே கொத்தவாசல் அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரிய வெண்மணி ஊராட்சி கொத்தவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழி தேவி தலைமை தாங்கினார். புதுவேட்டகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், வேப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்றார். விழாவில் வேப்பூர் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஜீவரத்தினம், வேப்பூர் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி லதா, அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ரூ.4 லட்சம் மதிப்பில் பொருட்கள்

இதையடுத்து பள்ளிக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 2 குளிர்சாதன பெட்டி, சுமார்ட் போர்டு, 36 நாற்காலி, 6 மேஜை, 15 கம்ப்யூட்டர் சேர் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார். மேலும் பொதுமக்கள் பள்ளிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 4 பீரோ, 4 மேஜை, 5 நாற்காலி, 8 தண்ணீர் தொட்டி மற்றும் பள்ளி புத்தகம், எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர். முன்னதாக கொத்தவாசல் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்களை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து சீர்வரிசைகளை பெரம்பலூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி மற்றும் பெரம்பலூர் ரோஸ் நிர்மலா ஆகியோர் பெற்று கொண்டனர்.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து, கிராம கல்வி குழு தலைவர் வெங்கடாசலம், கிராம தர்மகர்த்தா நடேசன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயேன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை பட்டதாரி ஆசிரியர் இளவழகன் ஒருங்கிணைத்தார். முடிவில் ஆசிரியர் முத்துகுமார் நன்றி கூறினார். 

Next Story