கொருக்குப்பேட்டை பகுதியில் ஜெயலலிதா அறிவித்த ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ பணிகள் நிறுத்தம் பொதுமக்கள் ஏமாற்றம்


கொருக்குப்பேட்டை பகுதியில் ஜெயலலிதா அறிவித்த ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ பணிகள் நிறுத்தம் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:30 AM IST (Updated: 31 Jan 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

ராயபுரம்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைக்கப்படும் என அறிவித்தார்.

புல்வெளி, நடைபாதை, சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள், வீடியோ காட்சிகள் போன்ற வசதிகளுடன் ரூ.2 கோடி செலவில் இந்த பூங்கா அமைக்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார்.

இடம் தேர்வு

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாநகராட்சியின் 47-வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசைமாற்றுவாரிய குடியிருப்புக்கு பின்புறத்தில் தண்டையார்பேட்டை கோக்ரேன் பேசின் ரோடு பகுதியில் இந்த பூங்கா அமைப்பதற்காக 50 ஆயிரத்து 110 சதுரஅடி கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த பூங்காவில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பசுமை தோட்டம், சைக்கிள் பயண பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு படங்கள், வாசகங்கள் இடம்பெற்ற டிஜிட்டல் பேனர்கள், பசுமை தோட்டத்தில் சுகாதாரம், தாவரம், மின்சாரம், பசுமை நிறைந்த வாழ்க்கையை வெளிக்காட்டும் வகையில் தனித்தனி இடங்கள் போன்றவற்றை அமைத்து கொடுக்க விருப்பம் உள்ள நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்தது.

ரூ.2 கோடி ஒதுக்கீடு

‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை மாநகராட்சிக்கு அளித்த வைப்பு நிதியில் இருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது.

அதில் ரூ.1 கோடியே 85 லட்சம் ஒப்பந்தப்புள்ளி கோரிய ஒரு தனியார் நிறுவனத்துக்கு பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனம் பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கவும் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து தனியார் நிறுவனம் சார்பில் கொருக்குப்பேட்டை பகுதியில் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

பணிகள் நிறுத்தம்

பூங்காவில் சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் அதன்பிறகு என்ன காரணத்தாலோ, குறைந்த ஆட்களை கொண்டு மந்தமாக பூங்கா பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணியும் கடந்த ஒரு மாத காலமாக முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

பூங்கா சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மட்டும் ஓரளவு முடிவடைந்து உள்ளது. நடைபாதை அமைக்கும் பணிக்காக கற்கள் பதிக்கும் பணி பாதி முடிந்தும், முடியாமலும் அரைகுறையாக உள்ளது. பூங்கா அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

விரைந்து முடிக்க கோரிக்கை

ஜெயலலிதா இருந்தவரை ஆர்.கே.நகருக்கு அவர் அறிவித்த திட்டங்கள் உடனடியாக எங்களை வந்து சேர்ந்தது. ஆனால் தற்போது அவர் இறந்த பிறகு அவர் அறிவித்த திட்டங்கள் எதுவும் எங்களை வந்து சேர்வதில்லை. ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ திட்ட பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூங்கா அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் இந்த பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடித்து அவருடைய நினைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்காவை திறந்து வைக்கவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story