ரூ.2 ஆயிரத்து 70 கோடி கடன் வழங்கி சாதனை வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்


ரூ.2 ஆயிரத்து 70 கோடி  கடன் வழங்கி சாதனை வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:00 AM IST (Updated: 1 Feb 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வங்கிகள் மூலம் இதுவரை ரூ.2 ஆயிரத்து 70 கோடி கடன் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விவேகானந்தன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கிஉதவிபொதுமேலாளர் ரவீந்திரன், இந்தியன் வங்கிதுணைபொதுமேலாளர் விஜயகுமார், நபார்டுஉதவிபொதுமேலாளர் பார்த்தசாரதி, முன்னோடி வங்கிமேலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:– தர்மபுரி மாவட்டத்தில் 2017–18–ம் ஆண்டில் வங்கிகள் மூலம் ரூ.ஆயிரத்து 851  கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விஞ்சி இதுவரை ரூ.2 ஆயிரத்து 70 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறை சார்ந்து ரூ.ஆயிரத்து 356  கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதிலும் இலக்கை விஞ்சி
ரூ.ஆயிரத்து 488 கோடிகடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் புதியதொழில் முனைவோர் தொழில் தொடங்க நிறுவன மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் இதுவரை 31 பயனாளிகளுக்குரூ.3 கோடியே 88
லட்சம் கடனுதவி வழங்கப்
பட்டுள்ளது.

மானியம்

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 3 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 33 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள  10 பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மானியத்துடன் வங்கி கடனுதவி பெறலாம். மிகவும் நலிவுற்ற பிரிவினர் மிகச்சிறிய அளவில் தொழில் செய்திட ரூ.20 ஆயிரம் வரை வங்கிகளை அணுகி  கடனுதவி பெறலாம்.  வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வருகிற மார்ச் மாதம் 31–ந்தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வங்கியாளர்கள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விவேகானந்தன் பேசினார். கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வங்கி அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அறிவியல் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இந்திய அரசின் நிதியுதவியுடன் பள்ளி மாணவ–மாணவிகளிடையே அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாக்க அறிவியல் கண்காட்சியை நடத்தி அதில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 2017–2018–ம் ஆண்டிற்கான விருது வழங்குவதற்காக சிறந்த படைப்புகளை தேர்வு செய்வதற்கான புத்தாக்க அறிவியல் கண்காட்சி தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை கலெக்டர் விவேகானந்தன் தொடங்கி வைத்து  மாணவ–மாணவிகள் உருவாக்கியிருந்த படைப்புகளை பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார். இந்த கண்காட்சியில் 55 ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 15 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 3 அரசு உதவிபெறும் பள்ளிகள், 3 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 76 பள்ளிகளை சேர்ந்த 230 மாணவ–மாணவிகள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பாராட்டு சான்றிதழ்

இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம், சுற்றுச்சுழல் பாதுகாப்பு முறைகள், சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் முறை தொடர்பான அறிவியல் படைப்புகள் காண்போரை கவர்ந்தன. இந்த கண்காட்சியில் சிறந்த படைப்புகளை பார்வைக்கு வைத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 6  மாணவ–மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் முதலிடம் பெற்ற மாணவ–மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் பழனிச்சாமி,  அனைவருக்கும் இடைநிலைகல்வித்திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், பள்ளி துணை ஆய்வாளர் சீனிவாசன், தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப அலுவலர் ரவிக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story