நாட்டு மாடு வாங்குபவர்களுக்கு சிறப்பு கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


நாட்டு மாடு வாங்குபவர்களுக்கு சிறப்பு கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2018 6:45 AM IST (Updated: 1 Feb 2018 6:45 AM IST)
t-max-icont-min-icon

நாட்டுமாடு வாங்கு பவர்களுக்கு சிறப்பு கடன் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

ஜி.எஸ்.தனபதி:- புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான மழை இல்லை. பெரும்பாலான பகுதிகள் வறட்சியாக உள்ளன. குறைவான பகுதியே விளைச்சல் உள்ளன. எனவே அதிக அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக் கெடுத்து வறட்சி நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். கீரனூர் சூசைபுரம் பகுதியில் தென்னந்தோப்பு வழியாக மின் கம்பி செல்கிறது. இதனால் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. எனவே அந்த மின் கம்பி செல்லும் பாதையை மாற்றி வேறு வழியாக கொண்டு செல்ல வேண்டும். புதுக்கோட்டை நரிமேடு போன்ற இடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும், என்றார்

குடிநீர் தட்டுப்பாடு

சங்கர்:- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக வேலைகள் நடைபெறவில்லை. 400 முதல் 500 பேர் வேலை செய்த ஊராட்சியில் தற்போது 10 முதல் 20 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது. கடும் வறட்சியை கருத்தில் கொண்டு வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உடன் வேலை வழங்க வேண்டும். மேலும் 6 மாதம் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும். மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நாட்டு மாடுகளின் விலை உயர்வு

அப்பாவு பாலாண்டார்:- சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக மக்கள் நாட்டு மாடுகள் வளர்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நாட்டு மாடுகளின் விலை உயர்ந்துள்ளது. எனவே இதை ஊக்கப்படுத்தும் விதமாக நாட்டு மாடு வாங்குபவர் களுக்கு சிறப்பு கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும், என்றார். இதையடுத்து கலெக்டர் கணேஷ் பேசுகையில், விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, வருவாய் அலுவலர் ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோகரன், அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story