சி.பி.ஐ. வழக்கில் இருந்து போலீஸ் அதிகாரிகள் விடுதலை, புதுவை கோர்ட்டு உத்தரவு


சி.பி.ஐ. வழக்கில் இருந்து போலீஸ் அதிகாரிகள் விடுதலை, புதுவை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Feb 2018 7:40 AM IST (Updated: 1 Feb 2018 7:40 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. வழக்கில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை விடுதலை செய்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி,

புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணப்பட்டு கிராமத்தில் கடந்த 19.12.2005-ல் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் மணப்பட்டு பகுதியை சேர்ந்த சத்யசீலன், கருணாகரன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் கருணாகரன் உயிரிழந்தார். இது தொடர்பாக அப்போது கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாபுஜி, ஏட்டு செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மொபட்டின் எண்ணை மாற்றியதாக பாபுஜி, செல்வம் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. அதன்பேரில் பாபுஜி, செல்வம் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சி.பி.ஐ. தரப்பில் குற்றத்தை சரிவர நிரூபிக்காததால் குற்றம் சாட்டப்பட்ட பாபுஜி, செல்வம் ஆகிய 2 பேரையும் வழக்கில் இருந்த விடுதலை செய்து தலைமை நீதிபதி தனபால் உத்தரவிட்டார். பாபுஜி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று தற்போது முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திலும், செல்வம் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சிறப்பு பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர். 

Next Story