திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக அலகுமலையில் 18-ந்தேதி ஜல்லிக்கட்டு


திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக அலகுமலையில் 18-ந்தேதி ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 1 Feb 2018 8:00 AM IST (Updated: 1 Feb 2018 7:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக பொங்கலூரை அடுத்த அலகுமலையில் வருகிற 18-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்காக அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு நடத்த அரசின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது. காரணம் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் படி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அரசிடமும் முன் அனுமதி பெறவேண்டும். இந்த நிலையில் இந்த ஆண்டு அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதிக்கான கடிதத்தை நேற்றுகாலை அலகுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலசங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன், கே.என்.விஜயகுமார், திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவாசலம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். அதைத்தொடர்ந்து வருகிற 4-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தில் வாடிவாசல் அமைப்பதற்கான கால்கோள் விழா நடைபெற உள்ளது.

எனவே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தற்போது சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி வாடிவாசல், தடுப்புகள், பார்வையாளர்கள் அமரும் இடம், காளைகள் கட்டி வைக்கும் இடம், மருத்துவ வசதி, வாகனம் நிறுத்தும் இடம் உள்பட பல்வேறு விதமான பணிகள் தனித்தனி கமிட்டிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.

அனைத்து பணிகளும் முடிந்தவுடன் வருகிற 18-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பார்வையிட வருவார்கள் என்பதால் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் மிகக்கவனமாக செய்யப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் தலைவர் பழனிசாமி, செயலாளர் நல்லாக்கவுண்டர், பொருளாளர் எம்.எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் மூர்த்தி, இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் எம்.கே.சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இந்த ஜல்லிக்கட்டில் நல்ல பயிற்சி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story