சிறுமலை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து


சிறுமலை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 1 Feb 2018 8:57 AM IST (Updated: 1 Feb 2018 8:57 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை வனப்பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர ரோந்து பணி நடந்து வருகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதி உள்ளது. இங்கு அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும், கடமான், செந்நாய், காட்டெருமை, கேளை ஆடு, குரங்கு, முயல் உள்ளிட்ட வன விலங்குகளும் வசித்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்காக சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்களை 24 மணி நேரமும் வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வனப்பகுதியில் கோடைகாலங்களில் காட்டுத்தீ பரவுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஏராளமான ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து நாசமாகுகின்றன.

மேலும், வனவிலங்குகளையும் பாதிக்கின்றன. சிறுமலையில் வசிக்கும் மனிதர்களாலும் தீ விபத்து ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் வனச்சரகர் சங்கரன் தலைமையிலான வனத்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சிறுமலையில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்குகள் வேட்டையை தடுத்தல் மற்றும் புது ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக குட்டக்காடு, பழையூர், புதூர், தென்மலை, கருப்புகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம். வனப்பகுதியில் தீ மூட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story