குடிநீர் கேட்டு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்
x

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே கல்லுருண்டான்சுனை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதிய அளவில் மழை இல்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றியது. இதனால் கிராமத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுமக்கள் தனியார் தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய ஆழ்துளை கிணறு அமைக்க போதிய அளவில் நிதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கிராமத்தில் பணம் வசூல் செய்து ஆழ்துளை கிணறு அமைத்து கொள்வதாகவும், அதன் பின்னர் ஒன்றிய நிர்வாகம் புதிய குழாய் அமைத்து ஆழ்துளை கிணற்றுக்கான தொகையை அளிக்குமாறும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் கல்லுருண் டான்சுனை கிராமத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் கிராம தேவைக்கு அளவான நீர் இருப்பு உள்ளது. எனவே ஆழ்துளை கிணற்றில் இருந்து கிராமம் வரை குழாய் இணைப்பு மற்றும் மின்மோட்டார் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும், குழாய் அமைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கல்லுருண்டான்சுனை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தனர். ஆனால் ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில் இல்லை. அதனை தொடர்ந்து அலுவலக வாசலில் அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பற்றாக்குறைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விரைவில் குடிநீர் பற்றாக் குறைக்கு உரிய தீர்வு ஏற்படவில்லையென்றால், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story