திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும்


திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும்
x
தினத்தந்தி 2 Feb 2018 4:15 AM IST (Updated: 2 Feb 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்று திருவாரூரில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா தெரிவித்தார்.

திருவாரூர்,

தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் குல்ஷேத்ரா சிறப்பு ரெயில் மூலம் காரைக்கால், நாகப்பட்டினம் ரெயில் நிலையங்களை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து திருவாரூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது திருவாரூர் வர்த்தகர்கள், ரெயில் பயணிகள் சங்கத்தினர், விவசாய அமைப்பினர் என பல்வேறு அமைப்பினர் குல்ஷேத்ராவை சந்தித்து ரெயில் நிலையத்தை மேம்படுத்தவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பின்னர் திருவாரூர் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிறுவர்கள் பூங்காவினை பொதுமேலாளரின் மனைவியும், தென்னக ரெயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவியுமான மான்ஸி திறந்து வைத்தார். அங்கு குல்ஷேத்ரா, மான்ஸி ஆகிய 2 பேரும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடினர். அதனையடுத்து ரெயில்வே மருத்துவமனை, ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரெயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறோம். பல்வேறு தரப்பட்ட மக்களிடம் ரெயில் நிலையங்களில் தேவைகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தோம். புதிய ரெயில்கள், ரெயில் பெட்டிகள் அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருவாரூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தண்டவாள பாதைகளை அதிகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் பின்னர் சென்னைக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மன்னார்குடியில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலையும், திருவாரூர் மார்க்கமாக இயக்க பரிசீலனை செய்யப்படும். அதேபோன்று திருச்சி- க ாரைக்கால் இருவழிப்பாதை அமைக்கப்பட்டவுடன் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு புதிய ரெயில்கள் இயக்கப்படும். திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும். பின்னர் அந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நீடாமங்கலம் அருகே குச்சுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சார பணிகளை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷேத்ரா தொடங்கி வைத்தார். அப்போது நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் ராஜாராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஜெயபால், வெங்கடேஷ், ராஜன்ரமேஷ், கிருஷ்ணசங்கர், ஸ்ரீதர் ஆகியோர் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷேத்ராவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீடாமங்கலத்தில் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி, கோட்ட வணிக மேலாளர் அருண்தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story