சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: தனியார் நிறுவன மேலாளர் தீக்குளிப்பு


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: தனியார் நிறுவன மேலாளர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 4:45 AM IST (Updated: 2 Feb 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவன மேலாளர் தீக்குளித்தார். இதைப் பார்த்து நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சேலம்,

சேலம் பழைய சூரமங்கலம் ரெயில்வே நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூங்கோதை. இவர்களுக்கு சங்கர், ரமேஷ், மோகன்(வயது 35) என்ற 3 மகன்களும், மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இதில் கடைசி மகனான மோகன் எம்.பி.ஏ. முடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

மோகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் மோகன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் டீன் அலுவலகம் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மண்எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் திடீரென ‘லைட்டர்’ மூலம் தனது உடலில் தீயை பற்ற வைத்தார். இதனால் அவரது உடலில் தீ மளமளவென எரிய தொடங்கியது. வலி தாங்க முடியாததால் அவர் கூச்சலிட்டவாறு டீன் அலுவலகம் முன்பு அங்கும், இங்குமாக ஓடினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏராளமான நோயாளிகள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் மோகன் அங்கு படுத்து உருண்டார்.

இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட சிலர் உடனடியாக தீயணைப்பான் கருவிகள் மற்றும் போர்வை உள்ளிட்டவை மூலம் அவருடைய உடலில் எரிந்த தீயை அணைத்தனர். அதைத்தொடர்ந்து உடல் கருகிய மோகனை தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் அன்பு, செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம், எனக்கு 2 அண்ணனும், ஒரு அக்காளும் உள்ளனர். பரம்பரை சொத்து பிரச்சினை காரணமாக நான் தீக்குளித்தேன். மேலும் ஆஸ்பத்திரியில் தீக்குளித்தால் உடனடியாக என்னை காப்பாற்றி விடுவார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனிடையே மோகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்யும் மோகன் சொத்து பிரச்சினை காரணமாக தீக்குளித்ததாக கூறி உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்‘ என்றார்.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மோகனிடம் சேலம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சண்முக பிரியா வாக்குமூலம் பெற்றார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவன மேலாளர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story