பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்


பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2018 4:30 AM IST (Updated: 2 Feb 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது. பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று 3-வது நாளாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மற்ற மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர். மாணவர்கள் போராட்டத்தையொட்டி சரபோஜி கல்லூரி வளாகத்தை சுற்றி ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். 

Next Story