மத்திய பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை சித்தராமையா கருத்து


மத்திய பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 2 Feb 2018 3:00 AM IST (Updated: 2 Feb 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், இது கர்நாடக மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

மத்திய பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், இது கர்நாடக மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மத்திய பட்ஜெட் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நிதியை ஒதுக்கவில்லை

அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து உள்ளனர். அந்த திட்டங்களை அமல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கவில்லை. 2022–ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு நிதியை ஒதுக்கவில்லை.

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாக கூறி இருக்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன். பெங்களூருவில் 2–வது கட்ட மெட்ரோ திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புறநகர் ரெயில் திட்டத்திற்கு நாங்கள் எங்கள் பங்கை வழங்குவதாக நேற்று(அதாவது நேற்று முன்தினம்) அறிவித்தோம். இப்போது மத்திய அரசு தனது பங்கை அறிவித்து உள்ளது. இது நல்லது தான்.

விவசாய கடன் தள்ளுபடி

இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அதை கவனத்தில் வைத்தே இந்த பட்ஜெட்டை தயாரித்து இருக்கிறார்கள். விவசாய வளர்ச்சிக்காக சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதை இப்போது அறிவித்து உள்ளனர். ஆனால் விவசாய விளைபொருளுக்கு சந்தை மற்றும் உற்பத்தி செலவை அவர்கள் கவனிக்கவில்லை.

துவரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,400 கொடுப்பதாக மத்திய அரசு சொல்கிறது. அத்துடன் மாநில அரசு ரூ.600 ஆதரவு விலையை தருகிறது. ஆனால் விவசாயிகள் துவரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,500 கேட்கிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் ஏமாற்றத்தை தந்துள்ளது. விவசாயத்துறைக்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி கூறினார். அதன்படி பார்த்தால் இதுவரை 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்க வேண்டும். அதுபற்றி பட்ஜெட்டில் எந்த ஒரு தெளிவான விளக்கமும் இல்லை. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி தேசிய சுகாதார பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் அமலுக்கு வரவில்லை. ஒரு குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு செய்யப்படும் என்று முன்பு கூறினர்.

இப்போது ரூ.5 லட்சம் தருவதாக அறிவித்து இருக்கிறார்கள். கடந்த முறை அறிவித்த திட்டங்களே அமலுக்கு வரவில்லை. இந்த புதிய காப்பீட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. முன்னுரிமை துறைகளுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கவில்லை. அதனால் இது வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் இல்லை. பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. இது கர்நாடக மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

16 மருத்துவ கல்லூரிகளை...

கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது. இந்த பலனை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதில் கொஞ்சம் கூட கொடுக்க இந்த அரசு செய்ய முன்வரவில்லை. ஆனால் பெட்ரோல்–டீசல் விலையை உயர்த்திவிட்டனர். சில வரிகளை உயர்த்தி தனியார் நிறுவனங்களுக்கான வரியை குறைத்துவிட்டனர். மத்திய அரசு தொழில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்குவதாக கூறி உள்ளனர். ஆனால் நாங்கள் கர்நாடகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்கி வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 16 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி இருக்கிறோம். முன்பு ஆட்சி செய்த பா.ஜனதாவினர் ஒரு மருத்துவ கல்லூரியை கூட திறக்கவில்லை.

நல்ல நாட்கள் வரவில்லை

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என்பதால், கர்நாடகத்திற்கு என்று மத்திய பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட். நல்ல நாட்கள் வரவில்லை. வரவே வராது. மத்திய அரசின் நிதி நிர்வாகமும் சரி இல்லை. நிதி பற்றாக்குறையை 3.3 சதவீதமாக குறைப்பதாக கூறி உள்ளனர். இது சாத்தியம் இல்லை.

ராஜஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்தும் அங்கு பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story