போக்குவரத்துக்கு இடையூறாக பொதுக்கூட்ட மேடைகளை அமைக்க கூடாது துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


போக்குவரத்துக்கு இடையூறாக பொதுக்கூட்ட மேடைகளை அமைக்க கூடாது துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 2 Feb 2018 3:30 AM IST (Updated: 2 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

பொதுக்கூட்ட மேடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்க கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசினார்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் ரெட்டம்பேடு சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி பஜாரில் பஸ் நிலையம் எதிரே அரசியல் கட்சிகளுக்கான பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் இடத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை தவிர்த்து பொதுகூட்டம் நடத்துவதற்கு வேறு ஏதேனும் மாற்று இடத்தை தேர்வு செய்திடலாமா? என உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தனித்தனியாக போலீசார் கருத்துகளை கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசியதாவது: -

அரசியல் கூட்டங்களை நடத்தும்போது அதற்கான அனுமதி குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக பெற வேண்டும்.

பொதுமக்களின் நலன்...

அவ்வாறு நடத்தப்படும் ஒரு கூட்டம் மாலை 6 மணி என்கிறபோது, அதற்காக அன்றையதினம் காலையில் இருந்து ஒலிபெருக்கியை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறை யாரும் ஏற்படுத்த கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக பொதுக்கூட்ட மேடைகளை அமைத்திட கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி பேனர்களை வைப்பது முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

இது தவிர ஆர்ப்பாட்டம் என்று அனுமதி பெறப்பட்டு அதனை பொதுக்கூட்டமாக மாற்றி விடும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. எனவே ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் எடுத்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு உள்ளூர் அரசியல் கட்சியினர் நடந்து கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தின் முடிவில், ஏற்கனவே காலம் காலமாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி பஜார் பஸ் நிலையம் எதிரே உள்ள பகுதியை தவிர வேறு இடத்தை கூட்டம் நடத்த தேர்வு செய்திட கூடாது என அனைத்து கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி வரவேற்றார். முடிவில் கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் நன்றி கூறினார். 

Next Story