திருப்பூரில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 12 வயது சிறுமி மீட்பு


திருப்பூரில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 12 வயது சிறுமி மீட்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 4:00 AM IST (Updated: 2 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 12 வயது சிறுமியை அதிகாரிகள் குழுவினர் நேற்று மீட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் ராயபுரம் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமியை வீட்டு வேலையில் ஈடுபடுத்துவதாக சைல்டு லைன் அமைப்புக்கு நேற்று காலை போன் மூலம் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாபு, மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், அணி உறுப்பினர்கள் வளர்மதி, புவனேஸ்வரி, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் பேச்சிமுத்து, வெங்கடாசலம், திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் ராயபுரம் விரைந்து சென்றனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த வீட்டில் 12 வயது சிறுமி வீட்டு வேலையில் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த அந்த சிறுமியை வீட்டு வேலைக்காக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே தங்க வைத்திருந்தது தெரியவந்தது. கோவை மாவட்டம் வடவள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மூலமாக அந்த சிறுமி திருப்பூரில் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டில் வேலைக்கு பணியமர்த்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அதிகாரிகள் குழுவினர் மீட்டு மரியாலயா காப்பகத்தில் தங்க வைத்தனர். மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட உள்ளாள். குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்திய வீட்டு உரிமையாளர் சுப்பிரமணியம் மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story