பூந்தமல்லி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பூந்தமல்லி அருகே, கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் பிரசிந்திகா(வயது 19). இவர், சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தனது தோழியிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பிரசிந்திகா, பின்னர் வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், அறை கதவை திறந்து பார்த்தனர். அப்போது அறையின் உள்ளே தங்கள் மகள் பிரசிந்திகா, தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அலறினர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரசிந்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தேர்வில் தோல்வி
இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஒரு பாடத்தில் மாணவி பிரசிந்திகா தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story