கவர்னர் கிரண்பெடியுடன் நாராயணசாமி, ரங்கசாமி அடுத்தடுத்து சந்திப்பு


கவர்னர் கிரண்பெடியுடன் நாராயணசாமி, ரங்கசாமி அடுத்தடுத்து சந்திப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 4:49 AM IST (Updated: 2 Feb 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகையில் கிரண்பெடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்தனர். இதனால் புதுவை அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, .

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி அடிக்கடி சந்தித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு வந்த அவர் கிரண்பெடியை திடீரென சந்தித்து பேசினார். அவருடன் ஜெயபால் எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் ஆகியோரும் வந்து இருந்தனர்.

முன்னதாக கவர்னர் கிரண்பெடிக்கு, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்தார்.

கவர்னரை சந்தித்தது குறித்து நிருபர்களிடம் ரங்கசாமி கூறுகையில், ‘எங்கள் தொகுதியில் உள்ள கனகன் ஏரியை சுத்தப்படுத்தி சுற்றுலா தலமாக கவர்னர் கிரண்பெடி மாற்றி உள்ளார். இந்த ஏரியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்க வந்தோம்’ என்று தெரிவித்தார்.

அதையடுத்து ரங்கசாமியிடம், நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதன்விவரம் வருமாறு:-

கேள்வி: அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி மவுனம் காப்பது ஏன்?

பதில்: இந்த அரசு செயல்படாத அரசாக தான் உள்ளது. எம்.எல்.ஏ. சாலைமறியல், உண்ணாவிரதம் இருந்த பிறகு தான் பழுந்தடைந்த சாலைகளை சரி செய்யும் நிலையில் அரசு உள்ளது. குறை கூறும் அரசாக தான் உள்ளது.

கேள்வி: மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு நீங்கள் (ரங்கசாமி) தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: எந்த மாநிலத்தில் கடன் வாங்காமல் திட்டங் களை செயல்படுத்துகின்றனர். தேவைக்கு ஏற்ப கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் தான் அனைத்து அரசுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் இரவு சுமார் 8மணியளவில் கவர்னர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்து கிரண்பெடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அரசின் திட்டங்கள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது.

திடீர் சந்திப்பு பற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, ‘கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’ என்றார்.

புதுவையில் கவர்னராக கிரண்பெடி பொறுப்பு ஏற்ற நாள் முதல் கவர்னருக்கும் -புதுவை ஆட்சியாளர் களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. குறிப்பாக நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் விவகாரம், நியமன எம்.எல்.ஏ.க்கள், இலவச பொருட்கள் உள்ளிட்டவை பெரும் பிரச்சினையாக இருந்தது. கவர்னர் கிரண்பெடி மக்களுக்கான நலத்திட்டங் களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என பகிரங்கமாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இதேபோல் கவர்னரை அரசு விழாக்களில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் புறக்கணித்து வந்தனர். இந்த மோதல் போக்கில் தற்போது மாறுதல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கவர்னர் மாளிகையில் நடந்த குடியரசு தின விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி சிரித்து பேசினார்கள். அரசு சார்பில் நடந்த காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியிலும் கவர்னர், முதல்-அமைச்சர் ஒன்றாக கலந்துகொண்டனர்.

கவர்னர் கிரண்பெடியை முதல்- அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசியது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story