ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள், நீதிபதி ராஜேஸ்வரன் பேட்டி


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள், நீதிபதி ராஜேஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 6:14 PM GMT)

‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்’ என்று நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார்.

கோவை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் கடந்த 31-ந் தேதி முதல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொண்டார். 3-வது நாளாக நேற்று இந்த விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் மாலையில் நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் மொத்தம் 50 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதில் 35 பேர் ஆஜரானார்கள். இனி மேல் ஆணையம் விசாரிக்க விரும்பும் சிலருக்கு மட்டும் சம்மன் அனுப்பப்படும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திகேய சிவ சேனாதிபதி, நடிகர் ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

கோவையில் நடந்த விசாரணையின் போது உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் நேற்று முன்தினம் 5½ மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்து மதுரையில் விசாரணை நடத்தப்படும். மேலும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.

மேலும் சென்னையில் நடந்த கலவரத்தின் போது ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது வரை தெரிவிக்கின்றனர். காவல் துறை அதிகாரிகள், தீவைத்த பெண் காவலரை மறைப்பதாகவே தெரிகிறது. எனவே காவல் துறையினரிடம் விசாரணை நடத்தும் போது அவர்களிடம் இது குறித்து விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story