கழிப்பறை கட்டினால் தான் வேலை: 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பாதிப்பு


கழிப்பறை கட்டினால் தான் வேலை: 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2018 2:45 AM IST (Updated: 2 Feb 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் ஒன்றியம் சொக்கநாதபுரம் ஊராட்சியில் கழிப்பறை கட்டினால் தான் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படும் என்பதால் பணியாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

மதகுபட்டி,

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சொக்கநாதபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 100 நாள் திட்ட பணியாளர்கள் கழிப்பறை கட்டினால் தான் வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். சொக்கநாதபுரம் ஊராட்சியில் சொக்கநாதபுரம், கட்டப்பட்டு, கோவில்பட்டி, புத்தரிபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள். தற்போது விவசாய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மணல் தட்டுப்பாட்டால் கட்டிட வேலை இல்லாமல் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இதனால் 100 நாள் திட்டத்திலாவது வேலை கிடைக்குமா என்றால், தற்போது வீட்டிற்கு வீடு கழிப்பறை கட்டினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். இங்கு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்டோர் தினசரி ஊரக வேலையில் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது கழிப்பறை கட்டினால் தான் வேலை என்பதால் அவர்களில் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை.

தற்போது பணியாளர்கள் இல்லாததால் கிராமங்களில் கண்மாய், ஊருணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், சுகாதார பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் முடங்கிவிட்டன. மக்களும் வேலை வாய்ப்பின்றி அவதியுற்று வருகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய நிர்வாகம் 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story