நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை விமானப்படை ஊழியர் மனைவியிடம் சில்மிஷம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது


நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை விமானப்படை ஊழியர் மனைவியிடம் சில்மிஷம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2018 4:00 AM IST (Updated: 3 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் விமானப்படை ஊழியர் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊட்டியை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

விருதுநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 57). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 7 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் பணி நிமித்தமாக சென்னை சென்றார். பணி முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். அவர் பயணம் செய்தது குளிர்சாதன பெட்டி ஆகும். இவரது இருக்கைக்கு எதிரில் உள்ள இருக்கையில் பெண் ஒருவரும் அவருடைய கணவரும் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம் என்பதால் பெண்ணை கீழ் படுக்கையில் படுக்க வைத்து விட்டு கணவர் மேல் படுக்கையில் படுத்து இருந்தார். இருவரும் நன்கு தூங்கிக்கொண்டு இருந்தனர். ரெயில் சேலம் அருகே வந்து கொண்டு இருந்தபோது பெண் தனியாக படுத்து இருப்பதை சந்திரசேகரன் பார்த்தார். அக்கம் பக்கம் பார்த்த போது அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அதைப்பார்த்ததும் சந்திரசேகரனுக்கு மனதில் சபலம் தட்டியது. எதிர்பாராத விதமாக அவர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பதறியடித்து எழுந்தார். அப்போது அருகில் மற்றொருவர் இருப்பதை கண்டதும் அவர் கூச்சலிட்டார்.

அவரது கூக்குரலை கேட்டு மேல் படுக்கையில் படுத்திருந்த அவருடைய கணவரும் கீழே இறங்கினார். இதற்கிடையே மற்ற பயணிகளும் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்தனர். இதுதொடர்பாக பெண்ணின் கணவர் ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது.

உடனடியாக பெண்ணும், அவருடைய கணவரும் இறங்கி இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது ரெயிலில் வந்த பெண்ணின் கணவர் கோவையில் உள்ள விமானப்படை முகாமில் ஊழியராக வேலை செய்வதும், பாட்னாவில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது.

கர்ப்பிணி என்றும் பாராமல் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை ஈரோடு ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுபற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story