துப்புரவு தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


துப்புரவு தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:14 PM GMT)

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர்.

தேனி,

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அவர்கள், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிதிச்செயலாளர் நீலக்கனலன் தலைமை தாங்கினார். கடந்த 26-ந்தேதி நடந்த குடியரசு தினவிழாவில், துப்புரவு தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய சான்றிதழை குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அவர்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘துப்புரவு தொழிலாளர்களுக்கு குடியரசு தின விழாவில் வழங்க வேண்டிய சான்றிதழை, குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கியதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச்சட்டம் 2015-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story