காவிரி நீருக்காக அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்க வேண்டும்


காவிரி நீருக்காக அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:44 PM GMT)

காவிரி நீருக்காக கர்நாடக முதல்-மந்திரியை தமிழக முதல்-அமைச்சர் சந்திப்பது காலம் கடந்த ஞானோதயம் என்றும், அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திருவண்ணாமலை,

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர்கள் முத்து, லூர்துராஜ் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, துணைத் தலைவர்கள் துரை, ராதாகிருஷ்ணன் யாதவ், மாநில தேர்தல் பிரச்சார குழு தலைவர் எதிரொலி மணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் அது ஆணா, பெண்ணா என்பது பெற்றவர்களுக்கே தெரிவிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. அப்படி ஒரு சட்டம் இருந்தும், சட்டத்தை மீறி சிலர் ‘ஸ்கேன்’ மையங்களை வைத்துக் கொண்டு குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவித்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று சட்டத்தை மீறுபவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரியை தமிழக முதல்-அமைச்சர் சந்திக்க நினைப்பது காலம் கடந்த ஞானோதயம் ஆகும். இந்த பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரியை பார்ப்பது பிரயோஜனம் இல்லை. பிரதமர் மோடியை தான் பார்க்க வேண்டும். எனவே அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று பிரதமரை பார்க்க வேண்டும். அதுவும் தேர்தல் நேரத்தில் அங்கு தண்ணீர் கேட்டால் கொடுப்பார்களா? எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story