மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் அடம் பிடித்த போதை ஆசாமி + "||" + stitching my pant; drunken person in to the hospital and told to the doctor

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் அடம் பிடித்த போதை ஆசாமி

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் அடம் பிடித்த போதை ஆசாமி
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைக்கும்படி டாக்டரிடம் போதை ஆசாமி ஒருவர் அடம் பிடித்தார். மேலும் அவர், 108 ஆம்புலன்சுக்கு அடியில் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர்,

மதுபோதை தலைக்கு ஏறி விட்டால், அது மனிதனின் மதியை மழுங்கடிக்க செய்து விடுகிறது. அது அவர்களின் கவுரவத்தை மட்டுமல்ல, வாழ்க்கை பாதையையும், சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பையும் குலைத்து, பாதாளத்தில் தள்ளி விடுகிறது. மதுபோதைக்கு அடிமையானவர்கள் செய்யும் செயலும், சொல்கிற சொல்லும் மனிதனின் பரிணாம வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுவதாகவே இருக்கிறது. அப்படித்தான் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மதுபோதையில் வந்த ஆசாமியின் செயல்... இது பற்றிய விவரம் வருமாறு:-


திருப்பூர் தாராபுரம் சாலையில் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பதால் இந்த ஆஸ்பத்திரியில் எப்போதும் நோயாளிகள் வருகை அதிகமாக இருக்கும். அது மட்டுமல்ல மாவட்ட எல்லையில் நடைபெறும் விபத்துகளில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதால் அவசர சிகிச்சை பிரிவு எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

அதன்படி நேற்று அரசு தலைமை ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் ஒரு டாக்டர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். அப்போது 50 வயது மதிக்க நபர் ஒருவர் கையில் பையுடன் திடீரென்று அவசர சிகிச்சை பிரிவுக்குள் புகுந்தார்.

அவருடைய பேண்ட் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இருந்தது. இதனால் பேண்ட் அரைக்கால் கால்சட்டை போன்று இருந்தது.

இதனால் டாக்டர் பதறித்துடித்து, ஏதோ விபத்தில் சிக்கி உள்ளார்? என நினைத்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது அந்த நபர், எனக்கு மயக்க மருந்து கொடுத்து, கிழிந்த எனது பேண்டை தையுங்கள் என்றார். மேலும் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார். அவருடைய செயலும், சொல்லும் அவர் அதிகமாக மது குடித்து இருப்பது தெரியந்தது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவு அறையில் இருந்து வெளியே போகுமாறு கூறினார்கள். ஆனால் அவர் அங்கிருந்து போக மறுத்து விட்டார். பின்னர் நைசாக பேசி அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினார்கள். இதையடுத்து வெளியே சென்ற அந்த நபர், கூச்சல் போட்டார். அப்போது அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. இந்த ஆம்புலன்சை பார்த்த அந்த நபர், ஆம்புலன்ஸ் அடியில் படுத்துக்கொண்டார். அப்போது எனது கிழிந்த பேண்டை தைத்தால்தான் அங்கிருந்துபோவேன் என அடம் பிடித்தார். அவருடைய தொல்லை தாங்க முடியாத ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அங்கு சாதாரண உடையில் வந்த போலீஸ்காரரிடம் நடந்ததை கூறினார்கள். அந்த போலீஸ்காரர், மதுபோதையில் இருந்த நபரை, மோட்டார் சைக்கிளில் ஏற்றி, வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, பேண்டை தைத்து தருவதாக நைசாக பேசி, அங்கிருந்து அழைத்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.