மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து + "||" + Fire accident in Madurai Meenakshi Amman temple

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சன்னதி செல்லும் வழியில் இருந்த கடைகளில் பெரும்பாலானவை எரிந்து நாசமாயின.
மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் இருபுறங்களிலும் வளையல்கள், அலங்கார பொம்மைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. நேற்று இரவு 10 மணி அளவில் கோவில் நடை முழுவதும் சாத்தப்பட்டு கோவில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.


இந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணி அளவில் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து கரும்புகை வெளி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தல்லாகுளம், பெரியார் பஸ் நிலையம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு படையினரும், விளக்குத்தூண், தெற்குவாசல் போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தபோது ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டியிருந்த கடைகளில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. உடனே தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் கோவிலின் கிழக்கு பகுதியில் கூடினார்கள். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. சுமார் 2½ மணி நேரத்துக்கும் மேல் தீயை அணைக்க போராடினர்.

போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கலெக்டர் வீரராகவராவ், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

தீப்பிடித்த கடைகளில் துணிகளால் ஆன கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் துணிகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அடுத்தடுத்த கடைகளில் தீ வேகமாக பரவியது. இதனால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சாம்பலாயின.

இதற்கிடையே கோவில் வளாகத்தில் பற்றிய தீயை உடனடியாக அணைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினரும், கோவில் வளாகத்தில் கடை நடத்தி வருபவர்களும் ராஜகோபுரம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.