திருச்சி, லால்குடி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருச்சி, லால்குடி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 8:50 PM GMT)

திருச்சி மாநகராட்சியில் முக்கிய கடைவீதி பகுதிகளில் போக்குவரத்திற்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன.

மலைக்கோட்டை,

இதையடுத்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து பிரிவு, குற்றப்பிரிவு துணை கமிஷனர் மயில்வாகணன் மேற்பார்வையில் வடக்கு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி கமிஷனர் விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று காலை திருச்சி பெரியகடைவீதி நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பு சாலைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை போலீசார் அதிரடியாக அகற்றினர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பெரியகடைவீதி, என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று நடைபெற்றது. திடீரென போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றியது நேற்று அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போலீசாரின் இந்த செயலை பாராட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக கவலையுடன் தெரிவித்தனர்.

லால்குடியில் மாவட்ட கலெக்டர் ராஜாமணியின் உத்தரவின்படியும், லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு அறிவுறுத்தல் படியும் லால்குடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி செயல் அலுவலர் குமரன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மலையப்பன், நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து லால் குடியில் நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் லால்குடி பேரூராட்சி பகுதிகளான நன்னிமங்கலம், கீழவீதி, மேலவீதி, நடுத்தெரு, சிவன் கோவில் தெரு, திருச்சி மெயின்ரோடு மற்றும் லால்குடி மெயின்ரோடு பகுதிகளில் இருபுறமும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் மிகவும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் 2 பொக்லைன் எந்திரம், டிராக்டர்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையொட்டி லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story