மாதவரம் முதல் பாடியநல்லூர் வரை சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல்


மாதவரம் முதல் பாடியநல்லூர் வரை சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:32 AM IST (Updated: 3 Feb 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்குன்றம், 

மாதவரத்தில் இருந்து பாடியநல்லூர் வரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கதிர்வேடு, புழல் கேம்ப், புழல் சிறை, காவாங்கரை, புழல் ஏரிக்கரை, வடகரை, சோத்துப்பாக்கம், பாடியநல்லூர் உள்ளிட்ட சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் பழுதடைந்து விட்டன. இதுவரையிலும் சீரமைக்கப்படாததால் இந்த சிக்னல்கள் எதுவும் இயங்காமல் காட்சி பொருளாகவே உள்ளன.

இதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல போட்டி போடுவதால் இந்த சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின்றன. சிக்னல்கள் இயங்காததால் வாகனங்கள் நிற்காமல் சென்று கொண்டே இருப்பதால் சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சிக்னல் இயங்காததால் அங்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள போக்குவரத்து போலீசாரும் சில நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செயல்படாத இந்த போக்குவரத்து சிக்னல்களை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story