வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு லாரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது


வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு லாரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 10:14 PM GMT (Updated: 2 Feb 2018 10:14 PM GMT)

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த சலீம் (வயது 25) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி சலீமிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.

இது குறித்து அவர், எம்.ஆர்.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கொடுங்கையூர் போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று டேங்கர் லாரியில் மறைந்திருந்த 3 பேரை மடக்கி பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

லாரி உரிமையாளர் உடந்தை

அதில் அவர்கள், கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச்சேர்ந்த நவீன்குமார்(21), பீகார் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார்(45) மற்றும் எருக்கஞ்சேரியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பதும், அந்த டேங்கர் லாரி கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த ஆயில் தாமு என்ற தாமோதரன்(45) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்ய சென்றபோது, அங்கு வந்த தாமோதரன் தனது லாரி மாயமாகி விட்டதாக போலீசாரிடம் புகார் கூறினார். விசாரணையில் அது பொய் என்பதும், இந்த வழிப்பறிக்கு லாரி உரிமையாளரான தாமோதரன் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

4 பேர் கைது

மேலும் லாரி உரிமையாளர் தாமோதரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதாகவும், செம்மரக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த அவரை ஆந்திர மாநில போலீசார் தேடி வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி உத்தரவின்பேரில் எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி மற்றும் போலீசார் தாமோதரன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து லாரி மற்றும் செல்போன், ரூ.5 ஆயிரம், கத்திகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கும் இதுபோல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story