மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி கடற்படை அதிகாரியின் மகன் உள்பட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி கடற்படை அதிகாரியின் மகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 10:18 PM GMT)

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான வழக்கில் கடற்படை அதிகாரியின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான வழக்கில் கடற்படை அதிகாரியின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 திருட்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டி பலி

மும்பை கோபர் பகுதியை சேர்ந்த மூதாட்டி மோகனி(வயது72). இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்ல அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மூதாட்டி மோகினி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மோகினி படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரின் அடையாளம் தெரியவந்தது.

கடற்படை அதிகாரி மகன் கைது

இதையடுத்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ரபாலேவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அதே கல்லூரியில் பயிலும் மற்றொரு 17 வயது மாணவரை பிடித்து விசாரித்தனர். இதில், இவர்கள் அம்பர்நாத், டோம்பிவிலி, தானே போன்ற இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 திருட்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் தங்களை ஆடம்பரமாக காட்டிக்கொண்டு கல்லூரியில் பயிலும் பெண் தோழிகளை கவர்வதற்காக மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரும் சிறார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதில், கைது செய்யப்பட்ட மைனர் வாலிபர் ஒருவர், கடற்படை அதிகாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story