மானிய விலையில் இருசக்கர வாகனம்: ஓட்டுனர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவியும் பெண்கள்


மானிய விலையில் இருசக்கர வாகனம்: ஓட்டுனர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவியும் பெண்கள்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:53 AM IST (Updated: 3 Feb 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற, ஓட்டுனர் உரிமம் வாங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் குவிந்து வருகின்றனர்.

தாம்பரம்,

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்கள் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற ஏராளமான பெண்கள் தினமும் குவிந்து வருகின்றனர்.

இதனை பயன்படுத்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்களும், தரகர்களும் பெண்களை அணுகி ஓட்டுனர் உரிமம் வாங்கித்தருவதாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இணை கமிஷனர் ஆய்வு

இதனையடுத்து போக்குவரத்து துறை தெற்கு இணை கமிஷனர் ராமலிங்கம் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு விரைவாக பழகுனர், ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:-

தரகர்களை அணுக வேண்டாம்

வழக்கமாக வரும் கூட்டத்தைவிட மானிய விலை இருசக்கர வாகனம் பெற பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் பெற 4 மடங்கு கூட்டம் வருகிறது. அவர்களுக்கு உரிய உரிமங்களை வழங்கி வருகிறோம். பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற தரகர்களை அணுகவேண்டாம். நேரடியாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் கேட்கும் ஓட்டுனர் உரிமம் அரசு அனுமதித்துள்ள காலவரையறைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story