சர்க்கரை ஆலை அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்


சர்க்கரை ஆலை அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சரவணம்பட்டி,

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் சுமார் 300 கரும்பு விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள கரும்புகளை வெட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணரியம்மன் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். அதில் மத்திய அரசு நிர்ணயம் செய்த தொகையை அந்த ஆலை நிர்வாகத்தினர் வழங்கி விட்டனர்.

ஆனால் தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கடந்த 2013-14-ம் ஆண்டில் டன் ஒன்றுக்கு ரூ.225 கொடுக்கவேண்டும் என்று நிர்ணயித்தது. அதேபோல் 2014-15-ம் ஆண்டில் டன் ஒன்றுக்கு ரூ.300-ம், 2015-16-ம் ஆண்டில் டன் ஒன்றுக்கு ரூ.450-ம், 2016-17-ம் ஆண்டில் டன் ஒன்றுக்கு ரூ.325-ம் என 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,300 விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கவேண்டும். ஆனால் அதற்கு பதில் நிலுவைத்தொகையாக ரூ.130 மட்டும் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளிடம் ரூ.130 மட்டும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு இனிமேல் உங்களுக்கு பாக்கி எதுவும் இல்லை என சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒரு பத்திரத்தில் எழுதி வாங்கி உள்ளது. இதை கண்டித்து அன்னூரில் உள்ள அந்த சர்க்கரை ஆலையின் அலுவலகத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி விவசாயிகள் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்க்கரை ஆலை முன்பு கடந்த 20-ந் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் 30-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் அந்த பத்திரத்தை திருப்பி அளிப்பதாக தெரிவித்த னர். இதுவரை விவசாயிகளுக்கு அந்த பத்திரத்தை திருப்பி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று அன்னூர் கோட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சுப்பையன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்னூர் சத்தி ரோட்டில் உள்ள பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் எங்களை எமாற்றி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். எனவே அந்த படிவத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆலையின் கதவை பூட்டினர். பின்னர் அவர்கள், தங்களின் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதை அறிந்த அன்னூர் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விவசாயிகள் மற்றும் அலுவலக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story