காட்டு யானை தாக்கி முதியவர் பலி 2 பேர் படுகாயம்


காட்டு யானை தாக்கி முதியவர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:45 AM IST (Updated: 4 Feb 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி செம்மண் குட்டை என்னும் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. பகலில் காட்டிற்குள் இருக்கும் யானை இரவு நேரங்களில் அருகில் உள்ள அலகுபாவி, சென்னப்பள்ளி, சின்னாறு, டேம் எப்பளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள விவசாய நிலங்களை நாசம் செய்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானை துரத்தியதில் வனத்துறை ஊழியர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை சின்னாறு அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 300 மீட்டர் தொலைவில் அந்த காட்டு யானை சுற்றித்திரிந்தது. யானை இருப்பதை அறியாமல் கிராம மக்கள் அந்த வழியாக சென்றனர். அப்போது யானை அவர்களை துரத்தியது.

இதில் சின்னாறு அருகே உள்ள பந்தரகுட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜப்பா (வயது 70) என்பவரை யானை தாக்கியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜப்பாவின் உடலை மீட்க சென்ற பலவதிம்மனப்பள்ளியை சேர்ந்த ரங்கநாதன் (38), பந்தரகுட்டையை சேர்ந்த முனிகிருஷ்ணன் (22) ஆகிய 2 பேரை யானை தாக்கியதுடன், அவர்களை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் அங்கு சென்று யானை தாக்கி பலியான ராஜப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மாந்தோப்புக்கு யானை சென்றது. இதனால் கிராம மக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

Next Story