குஷ்பு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் விதிமீறல்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு


குஷ்பு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் விதிமீறல்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Feb 2018 2:15 AM IST (Updated: 4 Feb 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடலில் குஷ்பு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முக்கூடல்,

முக்கூடலில் குஷ்பு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் முக்கூடலில் நேற்று முந்தினம் இரவு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்துக்கு இரவு 10 மணி வரை மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்தனர்.

ஆனால், கூட்டத்தில் பேசிய தலைவர்கள் 10 மணியை கடந்து நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கூட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினர். ஆனால், விதிமீறி இரவு 10.30 மணிக்குத்தான் கூட்டம் முடிவடைந்தது.

வழக்குப்பதிவு

இதனால் முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசுவரி புகாரின் பேரில், இந்த கூட்டத்தை நடத்திய முக்கூடல் நகர காங்கிரஸ் தலைவர் திரவிய சுப்பிரமணியன் என்ற சரவணன், பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் அரிநாராயணன் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

குஷ்பு நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்ததில் இருந்தே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நெல்லைக்கு அவர் வருவது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை, காங்கிரஸ் நிர்வாகிகளை மதிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நிர்வாகிகள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதற்கு குஷ்பு காட்டமாக பதில் அளித்து இருந்தார்.

பரபரப்பு

இதன் பிறகு முக்கூடலில் காமராஜர், ராஜீவ்காந்தி ஆகியோருக்கு சிலை அமைக்க குஷ்பு அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. இதற்கு முறையான அனுமதி பெறாததால் அடிக்கல் நாட்டக்கூடாது என்று போலீசார் கூறினார்கள்.

இந்த நிலையில் குஷ்பு பங்கேற்ற இந்த பொதுக்கூட்டமும் விதியை மீறி நடந்துள்ளதாக நிர்வாகிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story