காளையார்கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயங்கள் மீது கல்வீசி தாக்குதல்-கண்ணாடி உடைப்பு


காளையார்கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயங்கள் மீது கல்வீசி தாக்குதல்-கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவிலில் உள்ள 2 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கினர். இதில் ஆலயத்தின் ஜன்னல், மாதா கெபி கண்ணாடிகள் உடைந்துபோனது.

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு நெடுஞ்சாலை ஓரம் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிலர், நரிக்கோட்டையில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தின் முகப்பு பகுதியில் இருந்த மாதா கெபி மீது கல்வீசி தாக்கினர். இதில் கெபி கண்ணாடி உடைந்து போனது. பின்னர் அந்த நபர்கள் அருகில் இருந்த மற்றொரு கிறிஸ்தவ ஆலயம் மீதும் கல்வீசி தாக்கினர். அப்போது அந்த ஆலயத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து போயின. கல்வீசி தாக்கிய சத்தம் கேட்டு ஆலய நிர்வாகிகள் மற்றும் நரிக்கோட்டை கிராமமக்கள் விழித்து பார்த்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர்.

ஆலயங்கள் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து கல்வீச்சு சம்பவம் தொடர்பாக நேற்று நரிக்கோட்டை, சருகணி, புலியடிதம்மம், பள்ளிதம்மம், ஆண்டிச்சியூருணி, சூசையப்பர்பட்டினம் மற்றும் காளையார்கோவில் பங்கின் அனைத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, கல்வீச்சில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், ஆண்டுதோறும் ஆலய திருவிழாவின்போது நடைபெறும் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் கிறிஸ்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story