பாளையங்கோட்டையில் எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு சைக்கிள் போட்டி


பாளையங்கோட்டையில் எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 4 Feb 2018 2:30 AM IST (Updated: 4 Feb 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நடந்த எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த சைக்கிள் போட்டியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் நடந்த எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த சைக்கிள் போட்டியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்.

சைக்கிள் போட்டி


மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் இணைந்து பொதுமக்களிடையே எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு சைக்கிள் போட்டி பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 400 பேர் கலந்து கொண்டனர்.

இந்த சைக்கிள் போட்டியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டிகள் மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியாக 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

12 கிலோ மீட்டர் தூரம்

இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி தெற்கு ஐகிரவுண்டு சாலை வழியாக, திருச்செந்தூர் சாலையில் ஆச்சிமடம் வரை சென்று திரும்பும் வகையில் மொத்தம் 12 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வந்தனர். இந்த போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1000-ம், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.500 ரொக்க பரிசும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், டி.சர்ட்கள் வழங்கப்பட்டன.

இந்த சைக்கிள் போட்டியையொட்டி பாளையங்கோட்டை ரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகனங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story