திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பார்வை இல்லாத தொழுநோயாளிக்கு கண் அறுவை சிகிச்சை, டாக்டர்கள் சாதனை


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பார்வை இல்லாத தொழுநோயாளிக்கு கண் அறுவை சிகிச்சை, டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 4 Feb 2018 4:00 AM IST (Updated: 4 Feb 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

பார்வை இல்லாத தொழுநோயாளிக்கு கண் அறுவை சிகிச்சை செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூரை சேர்ந்தவர் வைரவன் (வயது 65). 15 வயது முதலே அவருக்கு தொழுநோய் பாதிப்பு இருந்துள்ளது. நாளடைவில் அவருக்கு நோய் பாதிப்பு முற்றியது. இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தார்.

இதையடுத்து அவருடைய உறவினர் தங்கவேல் என்பவர், வைரவனை வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்தார். வைரவனுக்கு ஏற்கனவே இடது கண்ணில் பார்வை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து நோய் பாதிப்பு அதிகரித்ததால் அவருடைய வலது கண்ணிலும் பார்வை திறன் குறைந்து 2 கண்ணும் தெரியாமல் தவித்து வந்தார்.

இதையடுத்து அவரை, தங்கவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு கண் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், வைரவனுக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைக்க செய்தனர்.

இதுகுறித்து கண் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் கூறுகையில், தொழுநோய் பாதித்தவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்வது கடினம். இருந்தாலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்சிகிச்சை பிரிவு டாக்டர்கள் வைரவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளோம். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணில் ‘லென்ஸ்’ பொறுத்தப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு வலது கண் நன்றாக தெரிகிறது என்றார். 

Next Story