போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

போதை பழக்கம் குறித்து மாணவர்கள், கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வி.ஐ.டி. நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

வேலூர்,

அணைக்கட்டு வட்டாரத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமில் வி.ஐ.டி. மாணவ-மாணவிகள், திட்ட அலுவலர்கள், மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் என 532 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அணைக்கட்டு வட்டாரத்துக்கு உட்பட்ட ஊசூர், பள்ளிகொண்டா, அரியூர், செம்பேடு, ஜி.ஆர்.பாளையம், மேல்மொணவூர், இலவம்பாடி, அன்பூண்டி, சதுப்பேரி, அப்துல்லாபுரம், பொய்கை மற்றும் விரிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணிதம், கணினி அறிவியல், ஆங்கில இலக்கணம், மன அழுத்தம், உயர்கல்வி வாய்ப்புகள், தேர்வை எளிதாக கையாளுதல் ஆகியவை பற்றி கற்று தர உள்ளனர்.

மேலும் அப்பகுதிகளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணி, ரத்த வகை மற்றும் ரத்த பரிசோதனை செய்ய உள்ளதுடன், குடிநீர், நிலத்தை பாதுகாத்து பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர்.

முகாம் தொடக்க விழா அணைக்கட்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திட்ட அலுவலர் மைதிலி வரவேற்றார். முகாமின் நோக்கம் பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ராஜசேகரன் விளக்கி கூறினார்.

வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்து பேசுகையில் “மருத்துவ படிப்பு படிப்பவர்கள் ஒரு ஆண்டு கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்று உள்ளது. அதேபோன்று வி.ஐ.டி.யில் பொறியியல் கல்வி படிப்பவர்கள் என்.எஸ்.எஸ். மூலம் கிராமங்களில் சேவை செய்ய உள்ளனர். கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யப்போகும் நீங்கள் கிராம மக்களின் உணவு முறை, குடும்ப முறை, விவசாய தொழில் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு, பயிர் காப்பீடு பற்றி அறிந்து கொள்ளாமல் பலர் உள்ளனர் அதுபற்றி என்.எஸ்.எஸ். மாணவர்கள் கிராம மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்” என்றார்.

மண்டல வனப்பாதுகாவலர் தின்கர்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நாட்டு நலப்பணி திட்டம் பற்றி மாணவர்கள் அறிந்து கொண்டு அதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். சமுதாயத்தை கெடுக்கும் செயல்களாக குடி பழக்கமும், புகை பழக்கமும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசே மது விற்கும் நிலை உள்ளது. குடி மற்றும் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கிராம மக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் நிலத்தடி நீர் அளவு குறைந்து வருகிறது எனவே மழை நீரை சேமிக்க வேண்டும். அதற்கு ஏரி, குளங்கள், ஆற்று கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

இந்தப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார். அதனை செயல்படுத்தும் விதமாக வி.ஐ.டி. சார்பில் அந்த குடிநீர் திட்டம் ஏற்படுத்தி தரப்படும். என்.எஸ்.எஸ் மாணவர்கள் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வி.ஐ.டி. மாணவர் நலன் இயக்குனர் மித் மகேந்திரகர், பள்ளி தலைமையாசிரியர் ஆர்.மூர்த்தி மற்றும் மா.த.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றி கூறினார். 

Next Story