தமிழகத்தில் அரசியல் சூழல் தலைகுனிவாக உள்ளது - நடிகர் நாசர்
தமிழகத்தில் அரசியல் சூழல் தலைகுனிவாக உள்ளது என்று ஈரோட்டில் நடிகர் நாசர் கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் நதிகள் இணைப்புக்கு ஆதரவு கொடுப்பதைவிட அந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். ஒரு திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? அதன்மூலம் பாதிப்பு ஏற்படுமா? என்று ஆராய வேண்டும். இன்றைய காலத்தில் அனைத்தும் ஒற்றை வரி செய்தியாகிவிட்டது. ஆழமான கருத்தை பதிவு செய்வதில்லை. எனவே நதிகள் இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு விரிவான விளக்கம் கொடுக்க வேண்டும்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தொழில் அதிபர்கள், விவசாயிகள், டாக்டர்கள், பேராசிரியர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமைதான் மக்களாகிய உங்களிடம் உள்ளது. நானே அரசியலில் இறங்கினாலும், சரியாக கடமை ஆற்றுவார்களாக என சிந்திக்க வேண்டும். உணர்ச்சிகரமான வாக்கியங்கள், இலவசத்திற்கு புள்ளி வைத்துவிட்டு, யாரை தேர்ந்தெடுப்பது என்று அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நமது தொழில், வாழ்க்கை முறையை மாற்றுவதாகவும், உயர்த்துவதாகவும் இருக்கும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழல் தலைகுனிவாக உள்ளது. பொறுப்புடன் நமக்கான எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். எனவே யார் நிற்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது.
இவ்வாறு நடிகர் நாசர் கூறினார்.