தாம்பரத்தில் 6 நாட்களில் 1,100 பேருக்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டுள்ளது
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 6 நாட்களில் 1,100 பேருக்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
தாம்பரம்,
வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஓட்டுனர் உரிமம் அல்லது ஓட்டுனர் பயிற்சி உரிமம் (லேனர்) வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே விடுமுறை தினமான சனிக்கிழமையும் (நேற்று) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படும் என்று அரசு அறிவித்தது. இதனையடுத்து அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் நேற்று செயல்பட்டன.
சென்னை தாம்பரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேற்று பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
1,100 பேருக்கு பயிற்சி உரிமம்
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழக்கமாக தினமும் 50 முதல் 70 வரையிலான விண்ணப்பங்களே பதிவு செய்யப்படும். ஆனால் தமிழக அரசின் இருசக்கர வாகன திட்ட அறிவிப்பு வந்த பின்னர், ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற கடந்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி முதல் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 29-ந் தேதி முதல் 3-ந் தேதி (நேற்று) வரை கடந்த 6 நாட்களில் 1,100 பேருக்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. 55 பேருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story