விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்


விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:30 AM IST (Updated: 4 Feb 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதை குற்றமாக கருதி, நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்

மும்பை,

குறைந்தபட்ச ஆதரவு விலையை காட்டிலும் குறைவான விலையில் விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதை குற்றமாக கருதி, நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் வலியுறுத்தினார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும், இதனை மீறினால் குற்றமாக கருதப்படும் என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஆண்டு அறிவித்தார். இருப்பினும், இது தொடர்பாக வரைவு மசோதாவை கூட அரசு இதுவரை தயார் செய்யவில்லை.

துவரம் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 400 வீதம் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், விவசாயிகள் வெறும் ரூ.4 ஆயிரத்து 200 தான் பெறுகிறார்கள். இதேபோல், சோயாபீன்சும் குறைந்தபட்ச ஆதரவு விலையை காட்டிலும் மிகவும் குறைவான விலையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.

பொறுமையை சோதிக்காதீர்கள்

இது தொடர்பாக மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த போதிலும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளின் பொறுமையை சோதிக்காதீர்கள்.

விவசாய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையை காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்தால், அதனை குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தெரிவித்தார்.

Next Story