படகு சவாரி கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்


படகு சவாரி கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:20 AM IST (Updated: 4 Feb 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை இந்தியா திட்ட பணிகளில் அதிக அக்கறை காட்டி வரும் கவர்னர் கிரண்பெடி புதுவை கனகனேரியில் படகு சவாரியை தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி,

தூய்மை இந்தியா திட்ட பணிகளில் புதுவை கவர்னர் கிரண்பெடி அதிக அக்கறை காட்டி வருகிறார். அவர் முதல்கட்டமாக வேல்ராம்பட்டு ஏரியை பார்வையிட்டு அதை பாதுகாக்கும் விதமாக அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி ஏரியை சுற்றிலும் கம்பி வலைகள் அமைக்கப்பட்டன. மேலும் ஏரிக்கரையில் ரோடும் புதிதாக போடப்பட்டு தற்போது அங்கு போக்குவரத்து சீராக நடந்து வருகிறது.

அடுத்ததாக அரசு மருத்துவக்கல்லூரியின் பின்புறம் உள்ள கனகனேரி கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார். ஆகாயத்தாமரை படர்ந்து சீரழிந்து கிடந்த அந்த ஏரியை சுத்தப்படுத்த கவர்னர் விரும்பினார். இதற்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர், தன்னார்வல அமைப்புகளை சேர்ந்தவர்கள் உதவிட முன்வந்தனர்.

மேலும் அரசுத்துறைகள், தன்னார்வலர்கள் உதவியுடன் அந்த ஏரியை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. சில தனியார் நிறுவனங்களும் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் ஏரி சீரமைப்புக்கு உதவின. இந்த ஏரி சுத்தப்படுத்தும் பணியினை கவர்னர் கிரண்பெடி வாரந்தோறும் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

தற்போது ஏரி தூர்வாரப்பட்டு ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மின் விளக்கு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த ஏரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார். மேலும் அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோரின் கைகளை இணைத்து ரிப்பன் வெட்டசெய்தார். மேலும் சிறிய படகு சவாரியையும் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசும்போது, பொதுப்பணித்துறை நிதியை காரணம் காட்டி பணிகளை அரைகுறையாக நிறுத்திவிடக்கூடாது என்று என்று குறிப்பிட்டார். அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, தேவநீதிதாஸ், சுற்றுலத்துறை இயக்குனர் முனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story