வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்


வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:43 AM IST (Updated: 4 Feb 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் வருகிற 7–ந் தேதி கட்சியின் 8–ம் ஆண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
கூட்டத்தில் ரங்கசாமி பேசியதாவது, கட்சியின் 8–ம் ஆண்டு விழாவை தொகுதி வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும். கடந்த தேர்தலில் கவனக்குறைவு காரணமாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதனால் நாம் மட்டுமில்லை மக்களும் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.

புதுவையில் உள்ள நிதி நெருக்கடிக்கு கடந்த ஆட்சியை காரணம் கூறி வருகிறார்கள். இதனை ஏற்க முடியாது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் நிதி கிடைக்கும். அதனை செய்யாமல் எப்பொழுதும் மத்திய அரசை குறை சொல்லக்கூடாது. இது மக்களை பாதிப்பதுடன், மாநிலத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும். அப்போது தான் மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற முடியும்.

புதுவையில் ஆளும் அரசு செயல்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவைகளை நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் என எந்தவொரு திட்டத்தையும் செய்யவில்லை.புதுவையில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர் நோக்கி உள்ளனர். கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சி பலப்படுத்தப்படும். புதிய வியூகத்துடன் வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

நமது மாநிலம் யூனியன் பிரதேசம். எனவே மத்திய அரசு, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது தான். இதனை நாங்கள் எப்பொழுதும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

1.கட்சியின் 8–ம் ஆண்டு விழாவை இம்மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுதல்.

2. கட்சியில் கிராம, வார்டு, நகர அமைப்புகள், சட்டமன்ற தொகுதி அமைப்புக்கான தலைவர் உள்பட கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.

3.புதுவையில் சொத்து வரி, தொழில் வரி, வணிக உரிமை வரி மற்றும் குடிநீர், மின்சார கட்டண உயர்வுக்கு கண்டனம்.

4. மத்திய அரசின் 2018–19ம் ஆண்டு பட்ஜெட்டிற்கு பாராட்டு.

முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் வரவேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், திருமுருகன், கோபிகா ஆகியோரும், முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

Next Story