நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்தது செல்போன் நிறுவன ஊழியர்கள் 5 பேர் படுகாயம்


நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்தது செல்போன் நிறுவன ஊழியர்கள் 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 10:33 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து உள்ளே புகுந்தது. இதில் காரில் பயணம் செய்த தனியார் செல்போன் நிறுவன ஊழியர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் பயஸ் அகமது (வயது 28). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பதிசாரத்தை சேர்ந்த பாபு (27), தோவாளையை சேர்ந்த ஹரிகாசன் (23), மேலராமன்புதூரை சேர்ந்த அசீப்பாபு (28), தாழக்குடியை சேர்ந்த ரமேஷ் (23) ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இவர்கள் 5 பேரும் பணி நிமித்தமாக காரில் பணகுடிக்கு சென்றனர். பின்னர், நள்ளிரவு பணகுடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி காரில் புறப்பட்டனர். காரை ரமேஷ் ஓட்டி வந்தார்.

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை லாயம்விலக்கு பகுதியில் வந்த போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதனால் சாலையோரம் இருந்த அருமை நாயகம் (58) என்பவரின் வீட்டு காம்பவுண்டு சுவரை உடைத்து, வீட்டின் முன் பகுதியில் புகுந்தது. இதில் காம்பவுண்டு சுவர், வீட்டின் முன்பகுதி ஜன்னல் கண்ணாடி, கதவு போன்றவை சேதம் அடைந்தது.

அதே நேரத்தில் இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த பயஸ் அகமது, பாபு, ஹரிகாசன், அசீப்பாபு, ரமேஷ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story