பா.ஜனதாவின் நிழல் அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


பா.ஜனதாவின் நிழல் அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Feb 2018 4:45 AM IST (Updated: 5 Feb 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் நிழல் அரசாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மேலஉளூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. திறந்தவெளி காரில் நின்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். மக்கள் தலைவராக இருந்த அவர், தமிழகத்தை பாதிக்கக்கூடிய மத்தியஅரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் பா.ஜனதாவின் நிழல் அரசாக, கிளையாக செயல்பட்டு வருகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிரை காக்க சுப்ரீம்கோர்ட்டிற்கு சென்று சட்டப்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து ஜெயலலிதா பெற்று தந்தார்.

இன்றைக்கு தண்ணீர் இன்றி கடைமடை பகுதிகளில் நெற்பயிர்கள் கருகிவிட்டன. மற்ற பகுதிகளிலும் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிரை காக்க கர்நாடக முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று தருவோம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சொல்கிறார்கள். ஆனால் தண்ணீர் தர கர்நாடக முதல்-மந்திரி மறுத்துவிட்டார். மக்கள் தலைவராக ஆட்சியில் இருப்பவர்கள் இல்லாதது இந்தநிலைக்கு காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக சசிகலா கொண்டு வந்தார்.

ஆனால் அவர் பா.ஜனதாவின் ஏஜெண்டு போல் செயல்பட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பினால் சிறைக்கு செல்ல நேரிட்டதால் சசிகலாவினால் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க முடியவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக சசிகலா கொண்டு வந்தார். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே அவர் தனது உண்மையான நிறத்தை வெளிகாட்டினார். தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரும் பா.ஜனதாவின் ஏஜெண்டு போல் செயல்பட்டு வருகிறார்.

முதல்-அமைச்சர் பதவி பறிபோனதால் நம்மை எதிர்த்து வந்த ஓ.பன்னீர்செல்வம், மயிலாப்பூரில் இருந்து வந்த கட்டளையால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். சட்டசபையில் தன்னை எதிர்த்து வாக்களித்ததை கூட நினைக்காமல் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்துள்ளார்.

ஒரத்தநாடு தொகுதியை சேர்ந்தவர்(வைத்திலிங்கம்) சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். 2001-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு? இப்போது அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது மக்களுக்கு தெரியும். சோழ மண்டலத்தின் பெருமையே விசுவாசம் தான். ஆனால் அவர் தன்னை அடையாளம் காட்டிவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் துரோகம் செய்துவிட்டார். தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தான் தமிழகம் முழுவதும் ஏற்படும். ஏனென்றால் துரோகத்திற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம். விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலுக்கும் இங்கே இடம் கொடுக்கமாட்டோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். பஸ் கட்டண உயர்வை குறைப்போம். எனவே ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story