முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியல்


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 5 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

வாகன தணிக்கையின் போது பெரியாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கினார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயவேல்(வயது57). பெரியாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்றார். வழியில் பெரியாம்பட்டி தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் அவரை சைகை காட்டி நிறுத்தினார்.

ஆனால் ஜெயவேல் மோட்டார்சைக்கிளை சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசனுக்கும், ஜெயவேலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஜெயவேலின் கை சப்-இன்ஸ்பெக்டரின் சட்டை மீது பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன், ஜெயவேலை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும்் இந்த சம்பவம் குறித்து அவர்கள் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஜெயவேலை அங்கிருந்து போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாலையில் பெரியாம்பட்டி திரும்பிய ஜெயவேல் தனது உறவினர் மற்றும் பொதுமக்களிடம் போலீஸ்நிலையத்தில் அவரை போலீசார் தாக்கியதாகவும், 4 மணி நேரம் ஒரு கைதியை போல் நடத்தியதாகவும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரியாம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் பெரியாம்பட்டி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் மறியல் கைவிடப்பட வில்லை. இதனால் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரியாம்பட்டி விரைந்து வந்து சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஜெயவேலை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசனை பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதற்கு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசனிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story